கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

 
கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள   கட்டாயப்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அதன்பிறகு  லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகினர்.  பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்த தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் 2 டோஸ் செலுத்தி, பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் அனைவருக்கும் கூட தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, அதன்படி இதுவரை 189. 43 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி

இந்தச் சூழலில்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும் என  யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மாநிலங்களில் கொரோனா  தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ,  அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள  எந்தாவொரு தனி நபரையும்  கட்டாயப்படுத்திய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  மேலும்   தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்பது போன்ற  உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

சிறார்களுக்கு தடுப்பூசி

அத்துடன்,   சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.  முன்னதாக  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட  மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை  விதிக்கப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து  தொடுக்கப்பட்ட  வழக்கிற்கு,  தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.