சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு

 
Satyendra Jain

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் நேற்று காலை 6 மணியளவில் சத்யேந்திர ஜெயின் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவர் முதலில் தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார். இதன்பின்னர், அவரை லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்த்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.