பைக் டாக்ஸிகளுக்குத் தடை வேண்டாம்! உச்சநீதிமன்றம் அதிரடி
கர்நாடகாவில் பைக் டாக்ஸி தடையை நீக்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ போன்ற பைக் டாக்சி சேவைகளை இயக்க அனுமதித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா மற்றும் என். கோட்டிஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பைக் டாக்ஸிகளுக்குத் தடை விதிப்பதைவிட, உரிய விதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்துவதே சிறந்தது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், குறைந்த கட்டணம், GPS வசதி ஆகியவை பெண்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பைக் டாக்ஸிகளை போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்து ஒப்பந்த வண்டிகளாக இயக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு ஒழுங்குமுறை நிபந்தனைகளை விதிக்கலாம், ஆனால் ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் என்ற ஒரே காரணத்திற்காக அனுமதிகளை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

