கொரோனா விதிகளை பின்பற்றுங்கள்: மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சுதர்சன் பட்நாயக்..

 
கொரோனா மணல் சிற்பம்

ஒடிசாவில்  கொரோனா விதிகளை பின்பற்ற வலியுறுத்தியும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த உலகப்  புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், அவ்வப்போது சுற்றுச்சூழல் மற்றும்  சமூகப் பிரச்சனைகள் குறித்து மணல் சிற்பம் மூலமாக விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறார்.  பல சாதனைகளை புரிந்துள்ள சுதர்சன், சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை  ஒட்டி சுமார் 5,500 ரோஜா மலர்களைக் கொண்டு  50 அடி நீள பிரம்மாண்ட கிறிஸ்துமஸ்  தாத்தா மணல் சிற்பத்தை உருவாக்கியிருந்தார்.   

மணம் சிற்பம்

தற்போது இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது. ஒமைக்ரான் பரவலும் 3 ஆயிரத்தைக் கடந்து விட்டது.  மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறது.

கொரொனா மணல் சிற்பம்

அந்தவகையில்  உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவரும்  கொரோனா குறித்து மணல் சிற்பத்தை சுதர்சன் பட்நாயக் வடிவமைத்திருக்கிறார்.  ஒடிசா  மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில்  இந்த மணல் சிற்பத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். அதில் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.  கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற வாசகமும் அந்த மணல் சிற்பத்தில் இடம் பெற்றுள்ளது.