ராகுல் காந்தியை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது.. நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு

 
சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தியை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதித்தால் அது நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்று நீதிமன்றத்தில் புதிய பாஸ்போர்ட் கோரிய ராகுல் காந்தியின் மனுவுக்கு சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து  ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார். தற்போது இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், அவர் தனது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளார். இதற்காக புதிய கடவுச்சீட்டுக்கு தடையில்லா சான்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் காந்தி

அந்த மனுவில், தனக்கு புதிதாக கடவுச் சீட்டு அளிப்பதற்கான நீதிமன்றத்தின் அனுமதி மற்றும் தடையில்லா சான்று வேண்டும் என்று ராகுல் காந்தி கோரியுள்ளார். புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கான ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரான சுப்பிரமணியன் சுவாமி, புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கான ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு

மேலும், ராகுல் காந்தியை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதித்தால், அது நேஷனல் ஹெரால்டு வழக்கின் விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். அதேசமயம் நீதிமன்றம், 2018ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ராகுல் காந்தி வெளிநாடு பயணம் செய்து வருகிறார். அவர் ஒடி விடுவாரோ, தப்பித்து விடுவாரோ என்ற அச்சம் எதுவும் இல்லை. பயணம் செய்யும் உரிமை அடிப்படை உரிமை என்று தெரிவித்தது. கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமிக்கு அவகாசம் அளித்து, மனு மீதான விசாரணையை மே 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.