மசூதி, இஸ்லாமியர் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இந்துத்துவா அமைப்பினர்

 
கர்நாடகா

இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இரண்டு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற போது மசூதி மீதும் இஸ்லாமிய மக்கள் மீதும் திடீரென கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹரிகேரு சட்டமன்ற தொகுதியில் உள்ள ரட்டி ஹள்ளி நகரில் இன்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், கர்நாடக மாநில சுதந்திர போராட்ட வீரர் சங்கொலி ராயண்ணா நினைவாக இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.‌ பேரணி நகரில் உள்ள காரஞ்சி என்ற பகுதியை அடைந்த போது இருசக்கர வாகனத்தில் சென்ற பல இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு தங்களிடம் இருந்த கற்களை கொண்டு இஸ்லாமிய மக்கள் அதிகம் இருக்கும் பகுதி மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் இருந்த மசூதி மீதும் கற்கள் வீசப்பட்டது. 

nullஇந்த தாக்குதலில் சுமார் 6 முதல் 8 பேர் காயம் அடைந்தனர். இதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகளும் காயம் அடைந்துள்ளனர். மேலும் பல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக 20 நபர்களை கைது செய்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயம் அடைந்த நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திட்டமிட்டு தங்களது பகுதியை தாக்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ள நிலையில், காவல்துறை தாக்குதலின் போது தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

ஹரிகேரு சட்டமன்ற தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் விவசாயத்துறை அமைச்சருமான பி.சி. பாட்டில் உத்தரவின் பேரில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். மேலும் தன் மீது திட்டமிட்டு இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது இதை மீறி உறுதியாக தான் வெற்றி பெறுவேன் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.