உச்சநீதிமன்ற நூலகத்தில் கண்களை திறந்த 'நீதி தேவதை' சிலை..!
தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் , கண்கள் கட்டப்படாத நீதிதேவதை சிலை உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும் , விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பையும் தண்டனையையும் வழங்கும் என்பதையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவே நீதிமன்றங்களில் "நீதி தேவதை" சிலை வைக்கப்பட்டிருக்கும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ‘நீதி தேவதை’, கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு , ஒரு கையில் வாளும் மற்றொரு கையில் நீதித் தராசும் ஏந்திய வண்ணம் நிற்பது போன்றே இருக்கும்.
சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவே நீதிமன்றங்கள் அதிகாரம் , அந்தஸ்தை பாராமல் நீதி வழங்கும் என்பதை உணர்த்தும் வகையிலும், சரியான எடைபோட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும் எந்தப்பக்கமும் சாயாத தராசு நீதி தேவதையின் இடது கையில் இருக்கும். அதே போல சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்கும் என்பதை குறிக்கும் வகையில் நீதி தேவதையின் வலது கையில் வாள் இருக்கும்.

ஆனால் இந்த அடையாளத்தை மாற்றும் விதமாக ‘நீதி தேவதை’ சிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த புதிய சிலையை திறந்து வைத்தார். இந்த புதிய நீதி தேவதையின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டு, கண்களை திறந்து உலகை பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கையில் இருந்த வாள் அகற்றப்பட்டு புதிதாக அரசியலமைப்பு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சட்டம் கண்களை மூடிக்கொண்டு இருக்கவில்லை என்பதை உணர்த்தவே கருப்பு துணி அகற்றப்பட்டதாகவும், சட்டம் என்பது தண்டனைக்கான அடையாளம் மட்டுமல்ல என்பதை வலியுறத்தும் விதமாக நீதி தேவதையிடமிருந்து வாள் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


