கொரோனா பணிக்கு நர்சிங் மாணவர்களை பயன்படுத்தலாம் - மத்திய சுகாதாரத்துறை..

 
நர்சிங் மாணவர்கள்


கொரோனா பணிக்கு பிஎஸ்சி நர்சிங் மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்தலாம்  என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் கொரொனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  பல்வேறு மாநிலங்களில்  தொற்று விகிதம் கனிசமாக உயர்ந்துள்ளது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 5 முதல் 10% வரை உயர்ந்திருக்கிறது. இந்த பாதிப்பு  தீவிரமாக கண்காணிக்கப்பட  வேண்டும் என்பதால் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.

கொரோனா

மேலும் அந்தக் கடிதத்தில், கொரோனா பணிகளுக்கு பி.எஸ்.சி., நர்சிங் படிக்கும் 3வது ஆண்டு மற்றும் 4வது  ஆண்டு படிக்கும் மாணவர்களை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்,  இளநிலை மற்றும் பயிற்சி மருத்துவர்களையும் கொரோனா பணிகளுக்கு  படுத்திக் பயன்படுத்திக்கொள்ளலாம்  என்று தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்,  சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட  வேண்டும் என்றும்,  ஓய்வுபெற்ற மருத்துவ நிபுணர்களை காணொலி வாயிலாக  மருத்துவ ஆலோசனை வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்  மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நர்சிங் , மருத்துவ மாணவர்கள்

நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும்,  கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என்றும்  அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.   மேலும் ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.