நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம்..

 
எஸ்.எஸ்.எல்.வி- டி3


எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் நாளை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.  

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி., சந்திரயான் மற்றும் ஆதித்யா என  வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.  இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் செயற்கை கோள்களை இந்த ராக்கெட்டுகள் சுமந்து செல்லும். அந்தவகையில் எடை குறைந்த செயற்கைக்கோளை சுமந்து செல்ல ஏதுவாக எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த முறை 'இ.ஓ.எஸ்., - 08 என்னும் செயற்கை கோளை இந்த எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் சுமந்து செல்ல இருக்கிறது.   

Image

 புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 175.50 கிலோ எடை கொண்ட 'இ.ஓ.எஸ்., - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ  வடிவமைத்துள்ளது.  ஓராண்டு ஆயுட்காலம் உடைய அதில், 'எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்' ஆகிய அதிநவீன ஆய்வுக் கருவிகள் உள்ளன.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, நாளை   காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., - 08 செயற்கைக்ளுடன்  எஸ்.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட் விண்ணில்  செலுத்தப்படவுள்ளது.  பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருபப்தி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.  மாதிரி செயற்கைக்கோளை கொண்டு வந்து  சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.