தீவிரவாதம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார், தீவிரவாதத்தால் பா.ஜ.க.வை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை... சித்தராமையா

 
பிரதமர் மோடி

தீவிரவாதம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார்,  தீவிரவாதத்தால் பா.ஜ.க.வை  சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று காங்கிரஸின் மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே. சிவகுமார் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில், அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நமக்கு 135 இடங்கள் கிடைத்தன. ஆனால் நான் மகிழ்ச்சியடையவில்லை. என்னுடைய அல்லது சித்தராமையா வீட்டுக்கு வர வேண்டாம். நமது அடுத்த இலக்கு நாடாளுமன்ற தேர்தல், நாம் நன்றாக போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

பெங்களூரு வன்முறையை பா.ஜ.க. அரசியல்மயமாக்குகிறது… டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

கர்நாடகா முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா பேசுகையில், தீவிரவாதம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார்,  தீவிரவாதத்தால் பா.ஜ.க.வை  சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. நாம் (காங்கிரஸ்)  பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று பா.ஜ.க. தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலில் இறந்தனர் என்று தெரிவித்தார்.

சித்தராமையா

கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவையின் காங்கிரஸ் தலைவராக சித்தராமையாவும், துணை தலைவராக டி.கே.சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த சனிக்கிழமையன்று கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவியேற்றனர். மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.