கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாகும்... சித்தராமையா

 
தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. அதற்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம்  கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர்  சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

டி.கே.சிவகுமார்

இந்த சூழ்நிலையில், பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாநில முதல்வர் பதவிக்கு தன்னை ஆதரிப்பதாக சித்தராமையா தெரிவித்தார். இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள்  முதல்வர் பதவிக்கு என்னை ஆதரிக்கின்றனர். தனது கட்சி சகாவான டி.கே. சிவகுமாருடனான தனிப்பட்ட உறவு மிகவும் நன்றாக உள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாகும்.

காங்கிரஸ்

அனைத்து பா.ஜ.க. அல்லாத கட்சிகளும் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் ஐந்து உத்தரவாதங்களையும் நிறைவேற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில்  கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.,ஏக்கள் கூட்டத்தில் கர்நாடகாவின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.