சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதேபோல் 8 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். யூ.டி.காதர் சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் பதவிக்கு 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் பெயர் இறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு புதிய அமைச்சர்கள் பட்டியல் குறித்த இறுதி அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் நாளை பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.