கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? - சித்தராமையா இன்று டெல்லி பயணம்

 
karnataka

கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், டெல்லிக்கு வருமாறு சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனயடுத்து ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லிக்கு வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.  டெல்லி செல்லும் சித்தராமையா காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இன்று மதியம் 2 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்த பின்னர் சித்தராமையா முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.