இன்று, தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் மோடி அரசு விரும்பும் முடிவுகளை வழங்குகின்றன... சரத் பவார் குற்றச்சாட்டு

 
சரத் பவார்

ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சிவ சேனா பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கியதை குறிப்பிட்டு, இன்று தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு விரும்பும் முடிவுகளை வழங்குகின்றன என்று சரத் பவார் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் உண்மையான சிவ சேனா யார் என்பதில் உத்தவ் தாக்கரே அணிக்கும், ஷிண்டே அணிக்கும் இடையிலான பிரச்சினையில், கடந்த 17ம்  தேதியன்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே பிரிவு  மனுத்தாக்கல் செய்தது. தற்போது இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பால் தாக்கரே

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் உத்தவ் தாக்கரேவிடம் தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார்,  இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. ஒரு முடிவு கிடைத்தவுடன் விவாதம் நடத்த முடியாது. அதை ஏற்று புதிய சின்னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மக்கள் (புதிய சின்னத்தை) ஏற்றுக் கொள்வதால் இது (பழைய சின்னம் இழப்பது) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. இந்திரா காந்தியும் இந்த சூழலை எதிர்கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. காங்கிரஸிடம் ஒரு நுகத்தடியுடன் கூடிய இரண்டு காளைகள் சின்னம் இருந்தது. பின்னர் அதை இழந்து 'கை'யை புதிய சின்னமாக பெற்றது. மக்கள் கை சின்னத்தை ஏற்றுக் கொண்டனர். அதேபோல் உத்தவ் தாக்கரே அணியின் புதிய சின்னத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என அறிவுரை செய்து இருந்தார்.

இந்திய தேர்தல் ஆணையம்

தற்போது, சிவ சேனா விவகாரத்தில், தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் ஆளும் (பா.ஜ.க.) அரசு விரும்பும் முடிவுகளை வழங்குகின்றன என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில், பாலாசாகேப் தாக்கரே தனது கடைசி நாட்களில், சிவ சேனாவின் பொறுப்பு உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி, சிவ சேனா மற்றும் அதன் சின்னத்தை வேறு ஒருவருக்கு ஒதுக்கியது. இது அரசியல் கட்சிகள் மீதான  பெரிய தாக்குதல். இன்று,  தேர்தல் ஆணையமும் மற்ற அமைப்புகளும் ஆளும் (பா.ஜ.க.) அரசு விரும்பும் முடிவுகளை வழங்குகின்றன. இன்று மோடியின் தலைமையில் செயல்படும் அமைப்பு, ஆட்சியை தங்கள் கையில் வைத்திருக்க நினைக்கிறது என தெரிவித்தார்.