அதிர்ச்சி சம்பவம்... ஆசனவாயில் காற்றுக் குழாயை சொருகியதால் பறிபோன இளைஞர் உயிர்!
தெலங்கானாவில் விளையாட்டாக நண்பர் ஆசனவாயில் காற்றுக் குழாயைச் செருகியதால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஐதராபாத் ஷாத்நகர் விஜய நேஹா தொழிற்சாலையில், நண்பர் விளையாட்டாக செய்த செயல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பவன் (22) மற்றும் சாய் ஆகிய இரண்டு நண்பர்கள், எலிகட்டா புறநகர்ப் பகுதியில் உள்ள விஜய நேஹா தொழிற்சாலையின் பேக்கிங் பிரிவில் பணிபுரிந்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை, பவன் வேலை செய்து கொண்டிருந்தபோது, சாய் பின்னாள் நின்று கொண்டு பவன் ஆசனவாயில் இரண்டு வினாடிகளுக்குப் உயர் அழுத்த காற்று குழாயை செருகினார். இதன் விளைவாக, காற்று பவனின் உடலுக்குள் புகுந்து அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காற்று அதிக அழுத்தத்துடன் ஆசன வாயில் வழியாக சென்றதில் உடல் உறுப்புகள் பாதிப்படைந்ததால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்தார். பவனின் சகோதரர் அமன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ஷாத்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீதாராம் தெரிவித்தார்.



