டெல்லி திகார் சிறையில் திடீரென மயங்கி விழுந்த சத்யேந்திர ஜெயின் - பெரும் பரபரப்பு !

 
Satyendra

டெல்லி திகார் சிறையில் உள்ள குளியல் அறையில் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயின் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்தர ஜெயின். இதுதவிர உள்துறை, மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட இலாகாக்களையும் அவர் கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. சிறையில் தலை மசாஜ், கால் மசாஜ், முதுகு மசாஜ் என அனைத்து வசதிகளும் ஜெயினுக்கு அளிக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், திகார் சிறை குளியலறையில் இன்று காலை 6 மணியளவில் சத்யேந்திர ஜெயின் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அவரது முக்கிய உறுப்புகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.