ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, பக்தர்கள் ரயில் மீது கற்கள் வீசப்படலாம், வெடிகுண்டுகள் வீசப்படலாம்.. சஞ்சய் ரவுத்

ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, ராமர் பக்தர்கள் ரயில் மீது கற்கள் வீசப்படலாம், வெடிகுண்டுகள் வீசப்படலாம், நாடு முழுவதும் கலவரம் தூண்டப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது என்று சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.
இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், தற்போது சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயா சின் என்று குறிப்பிட்டு இருக்கிறது மேலும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் எல்லைக்குள் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. சீனாவின் புதிய வரைபட விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உங்களுக்கு (மோடி) தைரியம் இருக்கிறதா?.
இந்த விவகாரத்தை (சீனாவின் மேப்) பிரதமர் மோடி கவனிக்க வேண்டும். பிரதமர் மோடி சமீபத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) உச்சிமாநாட்டில் கலந்து கொண்டார் மற்றும் சீன அதிகாரிகளையும் கட்டிப்பிடித்தார். இது போன்ற சம்பவம் நம் இதயத்தை நொறுக்கிறது. நமது நாட்டிற்குள் சீனா நுழைந்து விட்டதாக ராகுல் காந்தி கூறியது சரிதான். தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற நாடகத்தை நிகழ்த்தி விடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் நடக்கவில்லை, ஆனால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறினார்.
ராமர் கோயில் திறப்பு விழாவின் போது, ராமர் பக்தர்கள் ரயில் மீது கற்கள் வீசப்படலாம், வெடிகுண்டுகள் வீசப்படலாம், நாடு முழுவதும் கலவரம் தூண்டப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. இதெல்லாம் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே. இந்த அச்சம் மக்கள் மனதிலும் உள்ளது. எல்லாவற்றையும் மக்கள் முன்னிலையில் வைப்பது எங்கள் வேலை. அப்படி இல்லை என்றால், இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஹரியானாவில் நடந்த அல்லது தூண்டப்பட்ட கலவரம் இதற்கு ஒரு உதாரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.