பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் என்றார்கள் ஆனால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை.. சச்சின் பைலட்

 
கருப்பு பணம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்கும் என்றார்கள் ஆனால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை என்று பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸன் சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: நல்ல பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பா.ஜ.க. ஒரு ஊழல் கட்சி என்று கூறியது, மக்கள் ஒப்புக் கொண்டதன் விளைவாக நாங்கள் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தோம். மக்களுக்காக உழைப்போம், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறேன். 

சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

முதலில் ரூ.500 மற்றும் ரூ.1,000 கரன்சி நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தனர். அதன் பிறகு ரூ.2,000 நோட்டை கொண்டு வந்தனர். தற்போது மத்திய அரசு புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுகிறது. 2016ம் ஆண்டு பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு (பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் செல்லாது), பா.ஜ.க. தலைமையிலான அரசு பணமதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை ஒழிக்கும் என்று கூறியது. ஆனால் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும், இம்மாதம் 23ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கிகளில் கொடுத்து சில்லரை மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை மாற்ற படிவம், அடையாளச் சான்று தேவையில்லை என்று எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.