திருப்பதி கூட்ட நெரிசல் பலி- அரசு செய்த கொலை: ரோஜா
புஷ்பா படத்தின் கூட்டநெரிசலில் பெண் இறந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்தது போன்று திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் இறந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் முன்னாள் அமைச்சர் நடிகர் ரோஜா வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் நடிகர் ரோஜா பேசுகையில், திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆனால் வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் 6 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தின் மூலம் முதல்வர் சந்திரபாபு, உள்துறை அமைச்சர், செயல் அதிகாரி, எஸ்.பி. உள்பட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். அதிகாரிகளையும், அறங்காவலர் குழுவை யார் நியமித்தது. பக்தர்களுக்கு சேவை செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை .
பக்தர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லை. இது அலட்சியம் காரணமல்ல.. அரசின் கொலைகள்.. தெலுங்கானாவில் புஷ்பா படம் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் 1 பெண் இறந்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல் இந்த சம்பவத்திற்கு சந்திரபாபு முதல் கீழ்மட்ட அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். போலீசார் சம்பவத்தை தற்செயலான விபத்தாக வழக்குகள் பதிவு செய்துள்ளனர். திருப்பது லட்டு விவகாரத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக பா.ஜ.க, தெலுங்கு தேச தலைவர்கள் எத்தனைபேர் என்னென்ன பேசியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம். இவர்கள் செய்வது அனைத்தும் சரி என்பது போல் சித்தரிக்கிறார்கள். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை மேற்கொண்ட பவன் கல்யாண் இந்த சம்பவத்திற்கும் தீட்சை மேற்கொள்வாரா அல்லது சந்திரபாபுவிடம் ராஜினாமா செய்ய வைப்பாரா ? உள்துறை அமைச்சர் மற்றவர்களை திட்டுகிறார்களே தவிர சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த பணிக்கு வரவில்லை. கூட்ட நெரிசலுக்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சந்திரபாபுவின் விளம்பர வெறியால் கடந்த முறையில் கோதாவரி புஷ்கரத்தில் 29 பேர் பலியாகினர். இன்று நடந்த சம்பவத்திற்கு அலட்சியம் அல்ல அரசு செய்த கொலைகள். சந்திரபாபுவின் திறமையின்மையால் தான் பலர் இறந்தனர் என முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.