எங்க அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட்டேன்.. லாலு பிரசாத் யாதவின் மகள் எச்சரிக்கை

 
லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதை குறிப்பிட்டு, எங்க அப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விட மாட்டேன் என்று லாலு பிரசாத் யாதவின் இரண்டவாது மகள் ரோகிணி ஆச்சார்யா எச்சரிக்கை செய்துள்ளார்.

கடந்த 2004-09 காலகட்டத்தில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரை சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம சி.பி.ஐ. நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சி.பி.ஐ.

டெல்லியில் உள்ள தனது மகள்மிசா பாரதி வீட்டில் லாலு பிரசாத் யாதவ் தற்போது வசித்து வருகிறார். நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் மிசா பாரதி வீட்டுக்கு சென்று லாலு பிரசாத்திடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், எனது தந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் யாரையும் விடமாட்டேன் என லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக ரோகிணி ஆச்சார்யா டிவிட்டரில், எனது தந்தை துன்புறுத்தப்படும் விதம் சரியில்லை. அப்பாவை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். 

ரோகிணி ஆச்சார்யா

அவருக்கு ஏதாவது நடந்தால் நான் யாரையும் விட மாட்டேன். இதெல்லாம் நினைவில் இருக்கும். காலம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதை நினைவில் கொள்ள வேண்டும் என பதிவு செய்துள்ளார்.  மேலும் மற்றொரு டிவிட்டரில், 74 வயதான தலைவரான அவரை தொடர்ந்து  தொந்தரவு செய்தால் டெல்லியின் அதிகாரத்தை அசைக்க முடியும். சகிப்புத்தன்மையின் வரம்புகள் இப்போது சோதிக்கப்படுகின்றன என பதிவு செய்துள்ளார்.