தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளரை குறிவைத்து வருமான, அமலாக்கத்துறை ரெய்டு

 
தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளரை குறிவைத்து வருமான, அமலாக்கத்துறை ரெய்டு

பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தெலங்கான மாநில முன்னாள் எம்.பி.யும், பாலேரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கம்மத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இதேபோல் ஹைதராபாத் உள்ளிட்ட 8 இடங்களில் பெங்களூரில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி பிஆர்எஸ் கட்சியில் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸில்  இணைந்தார். அவருக்கு பாலேரு தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. 

இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் அவரது வீட்டில் அதிகாலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாஜக, பி.ஆர்.எஸ் கட்சி இணைந்து தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக  இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸ் கூறியிருந்த நிலையில் அவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரக்கூடிய நிலையில் இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயலில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.