குடிபோதையில் மாநிலத்தை நடத்தியதற்காக முதல்வர் கே.சந்திரசேகர் ராவை அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

குடிபோதையில் மாநிலத்தை நடத்தியதற்காக முதல்வர் கே.சந்திரசேகர் ராவை அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று தெலங்கானா காவல்துறைக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

தெலங்கானாவில் அம்மாநில காங்கிரஸ் ஹாத் சே ஹாத் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக  சோப்பட்டண்டி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பேசுகையில் கூறியதாவது: பொதுமக்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று காவல்துறை கூறுகிறது.  அவர்கள் (போலீஸ்) சோதனையின்போது உங்கள் வாயில் குழாயை செருகிறார்கள், நீங்கள் (மக்கள்) குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள். 

ரேவந்த் ரெட்டி

குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக உங்களை காவல்துறை சிறைக்கு அனுப்பினால், குடித்து விட்டு அரசை நடத்தும் நபரை என்ன செய்வார்கள்?. குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக பொதுமக்களை சிறைக்கு அனுப்பினால், குடிபோதையில் மாநிலத்தை நடத்தியத்திற்காக கே.சந்திரசேகர் ராவை (தெலங்கானா முதல்வர்) அந்தமான் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று நான் காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே பேசுகையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். அரசு இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்து, ஜனநாயகத்தை கொன்று, மக்கள் பிரச்சினைகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளை குறிவைத்து ஆட்சி செய்கிறது என தெரிவித்தார்.