டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பு!
பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 05ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரேகா குப்தா ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதியம் 12.35 மணியளவில் ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். துணைநிலை ஆளுநர் விகே. சக்சேனா முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.


