நிதிஷ் குமார் பதவி மீதான காதலால் குற்றம், ஊழலுடன் சமரசம்.. பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.சி.பி. சிங் குற்றச்சாட்டு

 
ஆர்.சி.பி. சிங்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  நாற்காலி (பதவி) மீதான காதலில் குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டார் என்று பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.சி.பி. சிங் குற்றம் சாட்டினார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சி.பி.  சிங் ஒரு காலத்தில் அந்த கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கு  மிகவும் நெருக்கமானவராக இருந்தார். இந்நிலையில் பா.ஜ.க.வுடன் ஆர்.சி.பி.  சிங் நெருக்கமாகி வருவதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அறிந்தனர்.இதனையடுத்து நிதிஷ் குமாருக்கும் ஆர்.சி.பி.  சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஆண்டு ஆர்.சி.பி.  சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் பா.ஜ.க.வில் இணையக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் அவர் அமைதியாக இருந்து வந்தார்.

ஆர்.சி.பி. சிங், தர்மேந்திர பிரதான்

இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஆர்.சி.பி.  சிங்  பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஆர்.சி.பி.  சிங் பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.வில் இணைந்த பிறகு ஆர்.சி.பி. சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆர்.சி.பி. சிங் கூறியதாவது:  பீகார் முதல்வர் நிதிஷ் குமார்  நாற்காலி (பதவி) மீதான காதலில் குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொண்டார். 

நிதிஷ் குமார்

பீகாரில் அவர் ஒன்றும் இல்லாமல் போய் விடுவார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஏழைகளுக்காகவும், ஒட்டுமொத்த தலைமைக்காகவும் சிறப்பாக பணியாற்றினார். நிதிஷ் குமார் ஒரு பல்டி மார் (முடிவுகளை மாற்றி கொள்ளுபவர்), அவர் தொடர்ந்து பி.எம்.ஆக (பல்டி மார்) இருப்பார். நாட்டில் எந்த வேலையும் நடக்கவில்லை என்றால், இந்தியா எப்படி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.