மீண்டும் ரூ.1000 நோட்டுகள் கொண்டு வரப்படுமா? - ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கம்

 
Sakthi Gandha das

2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற பின்னர் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுமா? என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார். 

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2000 ரூபாய் நோட்டுகளை திறும்பப்பெற்றுவிட்டு மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், இது முற்றிலும் 'ஊக' அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள், ரிசரவ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இப்போது ஏதுமில்லை. இவ்வாறு கூறினார்.