பதவியேற்பு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல ஜனநாயகத்துக்கான காங்கிரஸின் அர்ப்பணிப்பு.. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

 
4 மாதத்தில் 14 கோடி வேலைகள் இழப்பு.. மோடி இருந்தால் அது சாத்தியம்.. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கிண்டல்

கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியேற்பு விழா வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல ஜனநாயகத்துக்கான காங்கிரஸின் அர்ப்பணிப்பு என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில், கர்நாடக  முதல்வர் பதவி தனக்கு தான் வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரும் உறுதியாக நின்றனர். இதனால் கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் தலைமை அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவை எடுத்தது.

சித்தராமையா

இதனையடுத்து, கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும்  காங்கிரஸின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கர்நாடக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எங்களின் ஒரே பார்முலா மக்கள் சேவை. மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். எங்கள் கூட்டாளிகள் (கூட்டணி கட்சிகள்) அனைவரும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படுவார்கள். இது கொண்டாட்டம் அல்ல ஜனநாயகத்துக்கான காங்கிரஸின் அர்ப்பணிப்பு. ஜனநாயகத்துக்காக  போராடி அரசியல் சாசனத்தை காப்பாற்ற விரும்புபவர்கள் இந்த (பதவியேற்பு) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.