எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நிர்பந்திக்கப்படுகிறது.. லாலன் சிங் குற்றச்சாட்டு

 
லாலன் சிங்

லாலு பிரசாத்துக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யை நிர்பந்திக்கப்படுகிறது என்று  மத்திய பா.ஜ.க. அரசு மீது ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் என்ற ராஜீவ் ரஞ்சன் சிங் குற்றம் சாட்டினார்.

கடந்த 2004-09 காலகட்டத்தில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரை சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், லாலுவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம சி.பி.ஐ. கடந்த சில  தினங்களுக்கு முன் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

லாலு பிரசாத் யாதவ்

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலன் சிங் கூறியதாவது: ஆதாரங்கள் இல்லாததால் சி.பி.ஐ. அந்த வழக்கை இரண்டு முறை மூடியிருந்தது. நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்த பிறகு, அந்த வழக்கு இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. எப்படி திடீரென்று ஒரு சாட்சியை பெற்றது. எதிர்க்கட்சிகளை பார்த்து பா.ஜ.க பயப்படுவதால், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நிர்பந்திக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளை குறிவைக்க மத்திய நிறுவனங்களை பயன்படுத்துகிறது. 

சி.பி.ஐ.

அவர்கள் பீகாரில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் தங்கள் அரசியல் எதிரிகளை குறிவைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போது லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக பேசும் இந்த லாலன் சிங் தான், லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்கு முக்கிய காரணம். லாலன் சிங் 2008ல்  தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் தான் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.