கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வி.. யாராலும் தோற்கடிக்க முடியாது என்று நினைத்தவர்களின் தோல்வி இது - ராஜ் தாக்கரே

 
மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

யாராலும் தோற்கடிக்க முடியாது என்று நினைத்தவர்களின் தோல்வி இது என்று கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து  எம்.என்.எஸ். கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றியதையடுத்து அங்கு ஆட்சியமைக்க உள்ளது. மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பா.ஜ.க.

கர்நாடகாவில் பா.ஜ.க.வின் தோல்வி குறித்து செய்தியாளர்கள்  கேட்டதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது: மக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எனது முந்தைய உரையில், கர்நாடகாவில் எதிர்க்கட்சி வெற்றி பெறாது, ஆளும் கட்சி தோற்கும் என்று கூறியிருந்தேன். இது ஆணவத்தின் தோல்வி. யாராலும் தோற்கடிக்க முடியாது என்று நினைத்தவர்களின் தோல்வி இது. இந்த தோல்வியில் இருந்து அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்

மேலும், மகாராஷ்டிராவில் கர்நாடகா போன்ற மாற்றம் வருமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராஜ் தாக்கரே பதிலளிக்கையில், எதிர்காலத்தை முன்னறிவிக்கும் ஒரு ஜோதிடர் நான் அல்ல என்று தெரிவித்தார். கர்நாடகாவில் கிடைத்த படுதோல்வி பா.ஜ.க.வுக்கு பெரிய அதிர்ச்சியையும் பின்னடைவையும்  ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.