பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியதற்கு காரணம் இதுதான் - பிரதமர் மோடி விளக்கம்!!

 
modi

புதுச்சேரியில் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, விவேகானந்தர் பிறந்தநாள் விழா, அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழா இவற்றை சேர்த்து கொண்டாட  திட்டமிடப்பட்டது.இதற்காக  நாடு முழுவதிலும் இருந்து 7,500 மாணவர்கள் புதுச்சேரிக்கு வருவதாக இருந்தது.  அத்துடன்  பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் கொரோனா  காரணமாக தேசிய இளைஞர் விழா நேரடியாக இல்லாமல் காணொலியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தேசிய இளைஞர் விழாவை காணொலியில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

modi

இந்நிலையில் நிகழ்ச்சியில் காணொலிவாயிலாக பேசிய பிரதமர் மோடி, "மகன்களும், மகள்களும் சமம் என்பதை இந்த  அரசு நம்புவதால் தான் மகள்களின்  முன்னேற்றத்திற்காக திருமண வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் தங்கள் வாழ்வை உருவாக்கி கொள்ளும் வகையில் அதிக நேரம் மகள்களுக்கு கிடைக்கும்.  இது வாழ்வில் முக்கியத்துவத்தை தரும்.  அதன் மூலம் அவர்கள் சுய சார்பாகவும் இருக்க முடியும். சுதந்திரப் போராட்டத்தில் பல போராளிகளை நம் தேசம் பெற்றுள்ளது.  அவர்களின் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.  உரிய அங்கீகாரம் பெறாத உயரிய மனிதர்களைப் பற்றி இளைஞர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எழுதுகிறார்களோ அந்த அளவுக்கு  வரும் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு என்பது ஏற்படும். இன்றைய இளைஞர்களிடம் முடியும் என்ற மனப்பான்மை உள்ளது. இது ஒவ்வொரு தலைமுறைக்கும் உபயோகமாகவும், உத்வேகமாகவும்  உள்ளது. முத்ரா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, அடல் (Atal) இன்னோவேஷன் மிஷன் மற்றும் NEP மாதிரியான அரசு திட்டங்கள் நம் இளைஞர்கள் தங்கள் கனவுகளை எந்தவித தடைகளும், பயமும் இல்லாமல் தொடர உதவுகிறது " என்றார். 

modi

முன்னதாக பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருந்த நிலையில், அதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்தும் மசோதாவிற்கு  கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. பெண்களின் சட்டபூர்வ திருமண வயது 21 ஆக உயர்த்துவதின்  மூலம்  பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் கருத்தில் கொள்ளப்படும், மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்பை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.