நள்ளிரவில் லாரியில் பயணித்த ராகுல்.. காரணம் இதுதான்..

 
நள்ளிரவில் லாரியில் பயணித்த ராகுல்.. காரணம் இதுதான்..

காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி நேற்று  நள்ளிரவில் லாரியில் பயணம் செய்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில்  வசித்து வருகின்றார். தாயார் சோனியா காந்தியும் அவருடன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர்களை பார்ப்பதற்காக சிம்லா செல்ல திட்டமிட்ட ராகுல் பாதுகாப்பு படையினருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.  ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதிவரை காரில் சென்ற அவர், திடீரென காரை நிறுத்தச் சொல்லி  இறங்கிய ராகுல் காந்தி, சாலையோரம்  இருந்த லாரி ஓட்டுநர்களிடம் பேசினார்.

நள்ளிரவில் லாரியில் பயணித்த ராகுல்.. காரணம் இதுதான்..

அப்போது திடீரென லாரியில் ஏறி அமர்ந்துகொண்ட அவர், லாரியிலேயே பயணம் மேற்கொண்டார்.  கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக  அவர் லாரியில்   பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறிவருகின்றனர்.   மேலும் இது திட்டமிட்ட பயணமில்லை எனவும்,  திடீரென தாமாக அமைந்த பயணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள  காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்காரி, “ராகுல் காந்தி மட்டுமே லாரி ஓட்டுநர்களை அணுகி அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டறிய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.    இதேபோல், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஷ்ரினேட்  “ இந்த நாட்டின் குரலை கேட்கவும், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைஃப்களை புரிந்து கொள்ளவும் ராகுல் காந்தி விரும்புகிறார்” என்றார்.