பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தி இன்று பீகாரில் நடைபயணம்

 
rahul gandhi

பீகார் மாநிலத்தில் அரசியல் மாற்றம் நடந்துள்ள நிலையில், இன்று அம்மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்க்க விரும்பினார். இதற்காக அவர் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில நிபந்தனைகளுடன் நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று காலை பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் மாலை மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

Rahul Gandhi

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இன்று ராகுல் காந்து நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை அவர் இரண்டாவது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2 நாட்களாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வந்த ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று பீகாரில் நுழைகிறது. பீகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.