மேகாலயாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலில் போட்டி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
ராகுல் காந்தி

மேகாலயாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே  திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: தனக்கு எல்லாம்  தெரியும், அனைத்தையும் புரிந்து கொள்வேன், வேறு யாரையும் மதிக்க மாட்டேன் என்று நினைக்கும்  ஒரு வர்க்கக் கொடுமைகாரனை போன்றது பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.. அவர்களை கூட்டாக போராட வேண்டும். மேகாலயாவின் மொழி, கலாசாரம் மற்றும் வரலாறுக்கு தீங்கு விளைவிக்க பா.ஜ.க.வை காங்கிரஸ் அனுமதிக்காது. 

திரிணாமுல் காங்கிரஸ்

உங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிப்பதற்கு அடையாளமாக உங்கள் பாரம்பரிய ஆடையை அணிந்துள்ளேன். எனது நடவடிக்கைகள் இந்த ஆடையை பிரதிபலிக்கின்றன. ஆனால் பிரதமர் வருவதை போல நானும் இங்கு வந்திருந்தால், இந்த ஆடையை அணிந்து கொண்டு உங்கள் மதம், கலாச்சாரம், வரலாறு மற்றும் மொழியை தாக்கினால், நான் உங்களை அவமதித்ததாகவே இருக்கும். 

பா.ஜ.க.

திரிணாமுல் காங்கிரஸின் வரலாறு உங்களுக்கு தெரியும்- மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறை மற்றும் மோசடிகள், அவர்களின் பாரம்பரியத்தை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ்) கோவாவில் (தேர்தல்) பெரும் தொகையை செலவழித்தனர், மேலும் பா.ஜ.க.வுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மேகாலயாவில் அப்படித்தான் இருக்கிறது. மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸின் ஐடியா பா.ஜ.க. வலுவடைந்து ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதாகும். மாநிலத்தில் கான்ராட் கே சங்மா தலைமையிலான எம்.டி.ஏ. அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.