பிரதமர் கூறியது பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன்... ராகுல் காந்தி

லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் கூறியது பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சீனா கடந்த திங்கட்கிழமையன்று ஒரு புதிய ஸ்டாண்டர்ட் வரைப்படத்தை வெளியிட்டது. அதில் 1962 போரில் ஆக்கிரமிக்கப்பட்ட அக்சாய் சின் மற்றும் தெற்கு திபெத் என்று அது உரிமை கோரும் அருணாச்சல பிரதேசத்தை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாக சீனா காட்டுகிறது. முந்தைய வரைப்படங்களில் இருந்ததைப் போலவே, முழு தென் சீனக் கடலையும் சீனாவின் ஒரு பகுதியாக வரைபடம் காட்டுகிறது. சீனாவின் புதிய வரைபட விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
சீனாவின் புதிய வரைப்படம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் கூறியது பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். சீனா அத்துமீறி நடந்து கொண்டது முழு லடாக்கிற்கும் தெரியும். இந்த வரைபட விவகாரம் மிகவும் தீவிரமானது. நிலத்தை அபகரித்து விட்டனர். இது குறித்து பிரதமர் ஏதாவது கூற வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனா வரைப்படம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், சீனா கடந்த காலங்களில் தங்களுக்கு சொந்தமில்லாத பிரதேசங்களுக்கு உரிமை கோரும் இது போன்ற வரைபடங்களை வெளியிட்டது. வரைபடத்தை வெளியிடுவது ஒன்றும் அர்த்தமல்ல. இந்த பிரதேசங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். நம் பிரதேசங்கள் என்ன என்பது நமக்கு தெளிவாக தெரியும். அபத்தமான உரிமைகோரல்களை செய்வது மற்றவர்களின் பிரதேசங்களை உங்களுடையதாக ஆக்காது என்று தெரிவித்தார்.