ஜனநாயகத்தை பாதுகாக்கும், குரல் கொடுக்க அனுமதிக்கும் அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க.வால் கைப்பற்றப்பட்டது... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் குரல் கொடுக்க அனுமதிக்கும் அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க.வால் கைப்பற்றப்பட்டது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தவிர, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்தான் இந்தியாவில் மூன்றாவது முக்கிய பிரச்சினை. அந்த மூன்றாவது பிரச்சினை ஒரு மறைக்கப்பட்ட பிரச்சினை. அதை பற்றி யாரும் பேசுவதில்லை. 

பெண்களுக்கு எதிரான குற்றம்

ஆனால் நீங்கள் இந்தியா முழுவதும் நடந்து சென்று மக்களிடம் பேசும்போது, இந்த மூன்று முக்கிய பிரச்சினைகளை அறிந்து கொள்ளலாம். நான் விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை. இது தைரியத்திற்கும்  கோழைத்தனத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் இடையிலான போராட்டம். ஜனநாயகத்தை பாதுகாக்கும் மற்றும் குரல் கொடுக்க அனுமதிக்கும் அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க.வால் கைப்பற்றப்பட்டது. 

பா.ஜ.க.

அதனால்தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 4 ஆயிரம் கி.மீட்டர்  நடந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ள  வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நான் உட்பட பல அரசியல்வாதிகள் கண்காணிப்பில் இருக்கிறோம் என தெரிவித்தார்.