தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் - ராகுல் காந்தி!

மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு உடைந்தது. அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபி-களுக்கு சிறப்பு கவனம் ஆகியவைதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம். விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்திசெய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும்
நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.