காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ராகுல் காந்தி அவசர ஆலோசனை!

 
Rahul and Kharge

கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.   கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர்  டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.  காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லி வருமாரு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், சித்தராமையா மட்டுமே நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், டி.கே.சிவகுமார் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார்.  இந்த நிலையில், அவர் இன்று டெல்லி சென்றுள்ளார்.  இதனிடையே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். கர்நாடக முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் கார்கேவுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி கார்கேவை சந்திதுள்ளார்.