டெல்லியில் பேரணியாக சென்ற ராகுல்காந்தி கைது
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக்கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி 2-வது நாளாக டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார், வாகனத்தில் ஏற்றினர். ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் தடுத்ததால் போராட்டம் மூண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்காளர் பட்டியல்களின் 'சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்' (Special Intensive Revision - SIR) போது, நாடு முழுவதிலும் உள்ள சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தங்களின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ பெறாமல் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்ததாக ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இவரைப் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.

