உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு பெரிய பாடம்.. ராகவ் சதா

 
ராகவ் சதா

நிர்வாகத்தின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கையில் இருக்க வேண்டும்  என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குறிப்பிட்டு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த சிறந்த அதிகார சமநிலையை அவர்கள் சீர்குலைக்கக்கூடாது என்பது பா.ஜ.க.வுக்கு  ஒரு பெரிய பாடம் என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா தெரிவித்தார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான  வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும், பங்கும் இல்லை என்பதை ஏற்க முடியாது. டெல்லி மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்தான் டெல்லி சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும்.

உச்ச நீதி மன்றம்

ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கையில் ஆபத்து ஏற்பட்டு விடும். டெல்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டெல்லி அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பா.ஜ.க.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சியினர் வரவேற்றுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான ராகவ் சதா  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்) இறுதியாக சுவாசிக்க முடியும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த சிறந்த அதிகார சமநிலையை அவர்கள் சீர்குலைக்கக்கூடாது என்பது பா.ஜ.க.வுக்கு  ஒரு பெரிய பாடம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த வழக்கமான காழ்ப்புணர்ச்சி ஜனநாயகத்தறிகு நல்லது அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைதான் இன்று உச்ச நீதிமன்றம் கூறியது என்று தெரிவித்தார்.