தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு- கர்நாடகாவில் நாளை பந்த்
தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை பந்த் நடத்தப்போவதாக கர்நாடக வேளாண் சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவிரி ஆற்று நீர் பங்கீடு விவகாரத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட்டுள்ளது. நேற்று தண்ணீரை திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு கொடுத்த பரிந்துரையை அப்படியே இன்று உத்தரவாக பிறப்பித்துள்ளது காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன தேவைக்காகவும், மேட்டூர் அணை நீர் மட்டம் மற்றும் பாசன தேவையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை பந்த் நடத்தப்போவதாக கர்நாடக வேளாண் சங்கங்கள் பந்த் அறிவித்துள்ளன. பெங்களூரு, மாண்டியா, மங்களூரு, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

