புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும்.. பிரியங்கா சதுர்வேதி வலியுறுத்தல்

 
பிரியங்கா சதுர்வேதி

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் சிவ சேனாவின் (யு.பி.டி.) மூத்த தலைவர் பிரியங்கா சதுர்வேதி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும், பிரதமர் அல்ல என்று தெரிவித்தார். மேலும், காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறக்க  வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிான சிவ சேனா பிரிவும் புதிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவின் (யு.பி.டி.) மூத்த தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், குடியரசு தலைவர் சட்டமன்றத்தின் தலைவர், இது அரசாங்கத்தை காட்டிலும் மேலே உள்ளது, அதாவது இந்தியாவின் பிரதமரை காட்டிலும். நெறிமுறையின்படி, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குடியரசு தலைவரால் செய்யப்பட வேண்டும். அதிகாரத்தால் கண்மூடித்தனமான பா.ஜ.க. அரசியலமைப்பு ஒழுக்கக்கேட்டின் ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றம்

டெல்லியில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால்  மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. மேலும் எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து  தற்போதுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி 65 ஆயிர் சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்து விடும்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் கட்டிட பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்ததால், வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.