டெல்லி செங்கோட்டையில் 11 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி..
நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
நாட்டின் 78 வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி டெல்லி செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காலை முதலே மழை பெய்துவரும் நிலையில், மழைக்கு மத்தியிலேயே இன்று காலை 7.30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றியவுடன் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்பட்டன.
சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதன்படி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, ட்ரோன்களை வீழ்த்தும் ராடர்கள், முகத்தை அடையாளம் காணும் சிறப்பம்சங்களுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிய வருகிறார். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உயிர் தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்றும், நாட்டை பாதுகாக்கவும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் உழைத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.