இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

 
modi and rishi sunak modi and rishi sunak

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று துவக்க உரையாற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்படுவதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினரானது.


இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.