காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு, இன்று எண்ணப்பட்டன. கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.