தேஜஸ்வி கட்சிக்கு ஒரு எம்.பி. கூட இல்லை, நிதிஷின் செல்வாக்கு சரிந்து வருகிறது.. பிரசாந்த் கிஷோர்

 
பிரசாந்த் கிஷோர்

ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ஒரு எம்.பி. கூட இல்லை, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருகிறது இப்படிப்பட்ட கட்சிகளால், 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டை யார் நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் என்ன பங்கு வகிக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.


எதிர்வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு ஒரு எம்.பி. கூட இல்லை, நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருகிறது இப்படிப்பட்ட கட்சிகளால், 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டை யார் நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் என்ன பங்கு வகிக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம்

பிரபல தேர்தல் வியுக நிபுணரான பிரசாந்த் கிஷோர் பேசிய வீடியோ ஒன்றை அவரது அலுவலகம் எக்ஸில் (முன்பு டிவிட்டர்) வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிரசாந்த் கிஷோர்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு பீகாரில் இருந்து ஒரு எம்.பி. கூட இல்லை. அப்படிப்பட்ட கட்சியால் யார் நாட்டை ஆள வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியுமா?. நிதிஷ் குமார் ஜிக்கு முந்தைய பா.ஜ.க. உடனான கூட்டணியின் காரணமாக 42 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 16 எம்.பி.க்கள் உள்ளனர். நாளுக்கு நாள் சக்தி குறைந்து வரும் நீங்கள் (நிதிஷ் குமார்) தேசிய அரசியலில் என்ன பங்கு வகிக்க முடியும். 

நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்

நிதிஷ் குமார் ஜியின் சொந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது, அவரது சொந்த மாநிலத்தில் அவரது கால் (செல்வாக்கு) சுருங்குகிறது. எதிர்க்கட்சி அணியில் உள்ள முன்னுரிமை வரிசையை பார்த்தால், காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி, அதை தொடர்ந்து திரிணாமுல் பின்னர் தி.மு.க உள்ளது. இவை முழு அதிகாரத்துடன் (பெரும்பான்மை) மாநிலங்களை ஆளும் மற்றும் 20 முதல் 25 எம்.பி.க்களை கொண்ட கட்சிகள். அதேவேளையில், நிதிஷ் குமாரிடம் எதுவும் இல்லை. பீகார் ஊடகங்கள் மட்டுமே நிதிஷ் குமாரை பற்றி பேசுகின்றன. நீங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்லுங்கள், அவரை பற்றி யாரும் பேசுவதில்லை. பீகாரின் ஆளும் மெகா கூட்டணி மாநிலத்திற்கு மட்டுமே பொருத்தமானது, அது  தேசிய அரசியலில் முக்கியமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.