நேரு-காந்தி குடும்பம் சீனா அல்லது பாகிஸ்தானை மட்டுமே நம்புகிறது.. ராகுல் காந்தியை தாக்கிய மத்திய அமைச்சர்

நேரு-காந்தி குடும்பம் சீனா அல்லது பாகிஸ்தானை மட்டுமே நம்புகிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ராகுல் தாக்கினார்.
சீனாவின் புதிய வரைப்படம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், லடாக்கில் ஒரு அங்குலம் நிலம் கூட இழக்கப்படவில்லை என்று பிரதமர் கூறியது பொய் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். சீனா அத்துமீறி நடந்து கொண்டது முழு லடாக்கிற்கும் தெரியும். இந்த வரைபட விவகாரம் மிகவும் தீவிரமானது. நிலத்தை அபகரித்து விட்டனர். இது குறித்து பிரதமர் ஏதாவது கூற வேண்டும் என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்தார்.
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே சீனா வெளியிட்ட வரைபடத்தை நிராகரித்து விட்டது என்பதை ராகுல் காந்தியால் புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்தது ஜவஹர்லால் நேருவின் காலத்தில் நடந்தது. அவருக்கு (ராகுல் காந்திக்கு) வரலாறு தெரியாது. எனவே அவர் தொடர்ந்து இவற்றை சொல்லி வருகிறார். ராகுல் காந்திக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் சீன வரைபடத்தை நம்புகிறார், ஆனால் நமது வெளியுறவுத்துறை அல்லது பாதுகாப்பு படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதை அவர் நம்பவில்லை. நேரு-காந்தி குடும்பம் எப்போதும் சீனாவையே அதிகம் நம்புகிறது. அவர்களுக்கு இந்தியாவின் மீது நம்பிக்கை இல்லாததால், தேர்தல் ஆணையத்தின் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் அல்லது இந்தியாவின் வேறு எந்த அமைப்பும் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான் அவர்களின் பிரச்சினை. அவர்கள் சீனா அல்லது பாகிஸ்தானை மட்டுமே நம்புகிறார்கள். அது அவர்களின் பிரச்சினை, அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.