காங்கிரஸ் ஆட்சியில் மின் சப்ளை குறைவாக இருந்தததால்தான் மக்கள் தொகை பெருகியது.. மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு

 
பிரகலாத் ஜோஷி

காங்கிரஸ் ஆட்சியில் மின் சப்ளை குறைவாக இருந்தததால்தான் மக்கள் தொகை பெருகியது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினார்.

கர்நாடகாவில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தலுக்கு காங்கிரஸ் தீவிரமாக தயாராகி வருகிறது. அண்மையில் கர்நாடக காங்கிரஸ் தனது பேருந்து யாத்திரையை தொடக்க விழாவில் யாரும் எதிர்பாராத வண்ணம் தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்தது. அதாவது, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.  மின்சாரம்
காங்கிரஸின் இந்த வாக்குறுதி கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் என்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு காங்கிரஸ் கடும்  போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் காங்கிரஸால் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று பா.ஜ.க. தெரிவித்தது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்குவோம் என்ற காங்கிரஸின் வாக்குறுதியை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ்

மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரகலாத் ஜோஷி நேற்று கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: இப்போது இலவச மின்சாரம் தருவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. இலவச மின்சாரம் தருவார்கள் என்று நம்புகிறீர்களா?. அவர்கள் (காங்கிரஸ் ஆட்சி) காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் (பா.ஜ.க.) 24 மணி நேர மின்சாரம் கொடுக்க முடிந்தது. அவர்கள் (காங்கிரஸ்) மின்சாரம் குறைவாக வழங்கியததால்,  மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.