பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை
பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் புகாரில் சிக்கினார். மைசூருவில் உள்ள தனது வீட்டில் பணி செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றார். இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அத்துடன் சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா சரணடைய வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்தபோது சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து எம்பி, எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐ.பி.சி சட்டப்பிரிவு 376 உட்பிரிவு 2(k) கீழ் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


