லிஃப்ட் வருவதற்கு முன்பே கதவை திறந்த காவலர் கால் தடுமாறி விழுந்து பலி

தெலங்கானாவில் நண்பரை காண சென்று லிஃப்ட் வருவதற்கு முன்பே கதவை திறந்ததால் கால் தடுமாறி விழுந்ததில் போலீஸ் கமாண்டன்ட் மரணமடைந்தார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கங்காராம் தெலங்காமா மாநில தலைமை செயலகத்தில் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக பணி புரிந்து மூன்று மாதங்கள் முன்பு சிரிசில்லாவில் உள்ள 17வது பட்டாலியனின் போலீஸ் கமாண்டண்டாக பொறுப்பேற்று பணி புரிந்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவியும், சதீஷ் குமார் என்ற மகனும், கௌதமி, மீனா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சிர்சில்லா டவுன் வெங்கட்ராவ் நகரில் வசிக்கும் சிர்சில்லா நகர டிஎஸ்பிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிற்கு சென்றார். இரவு மீண்டும் அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றுவது மாடியில் இருந்து லிப்டில் இறங்கி செல்ல இருந்தார். ஆனால் லிப்ட் வருவதற்கு முன்பே லிப்ட் வந்ததாக நினைத்து கதவை திறந்தால் கால் தவறி மூன்றாவது மாடியில் இருந்து முதல் மாடி லிப்ட்டுக்குள் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் 1 மணி நேரம் போராடி கங்காராமை மீட்டனர். ஆனால் அதற்குள் அவரது உடலில் எந்தவித அசைவும் இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர்.
நண்பரை உடல் நலம் விசாரிக்க சென்று லிப்ட்டில் கீழே விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட்டுகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருபதும் லிப்ட் வருவதற்கு முன்பே கதவுகள் திறக்கப்படுவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு செய்து லிப்டின் பராமரிப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.