அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் துணிகளை எடுத்துச்சென்ற போலீஸ்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆபத்தான தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க சென்ற நிலையில் அவர்களது துணிகளை காவல்துறையினர் எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்பொழுது தீவிரம் அடைய துவங்கி உள்ளது இதன் காரணமாக குடகு சிக்கமங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கை சூழ்ந்த பகுதிகளில் குறிப்பாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர். இதில் குறிப்பாக சிக்கமங்களூரு மாவட்டம் முடிகெரே தாலுகா சார்மதி அருவியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ரோந்து பணியில் வந்த காவல் தறை உடனடியாக சுற்றுலா பயணிகளின் ஆடைகளை எடுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். “ஐயா ஆடையை கொடுங்கள், ஆடையை கொடுங்கள்” என்று காவல்துறை பின்னால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் ஓடி சென்று கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்ற காவல்துறையினர் பின்பு வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி அவர்களிடம் அவர்களது ஆடையை கொடுத்துவிட்டு எச்சரித்து அங்கிருந்து விரட்டி விட்டனர்.
சுற்றுலா பயணிகள் ஆபத்தான இடங்களில் குளிக்க செல்லக்கூடாது என்று பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருக்கும் போதிலும் அதை மதிக்காமல் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே குளிக்க செல்வதால் காவல்துறை இவ்வாறான நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.