மகா கும்பமேளா- புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி.
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. மௌனி அமாவாசை தினத்தையொட்டி மகா கும்பமேளாவில் புனித நீராட ஒரே நேரத்தில் 10 கோடி பக்தர்கள் திரண்டதால் ஜனவரி 29ம் தேதி அதிகாலை பயங்கர நெரிசல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அறுபதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்திற்கு பிரதமர் மோடி படகு மூலம் சென்று அங்கு புனித நீராடினார். பின்னர் கங்கையில் பிரார்த்தனை செய்தார்.
கும்பமேளாவில் கலந்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது பாக்கியம், சங்கமத்தில் நடைபெறும் ஸ்நானம் தெய்வீக தொடர்பின் ஒரு தருணம், அதில் பங்கேற்ற கோடிக்கணக்கானவர்களைப் போலவே, நானும் பக்தி உணர்வால் நிரப்பப்பட்டேன். கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும்” எனக் கூறினார்.